top of page

#DhoniRetires ஓராண்டாகவே வெயிட்டிங்... இப்போது ஏன் ஓய்வை அறிவித்தார் தோனி?


மான்செஸ்டர் அணியில் யாரெல்லாம் விளையாடுவார்கள், மெஸ்ஸியை எப்படி சமாளிக்கவேண்டும் என்றெல்லாம் பேசிவிட்டு, ''கேள்விகள் கேட்காம விட்டீங்கன்னா போய் ஃபைனல்ஸ் பார்ப்பேன்'' என்கிறார் தோனி. சில மணி நேரத்துக்கு முன்னால் தன் தலைமையில் சிஎஸ்கே சாம்பியன்ஷிப் வென்றதையே மறந்துவிட்டார்.

2010 ஐபிஎல் சீசன் அது. சென்னை சூப்பர் கிங்ஸுக்காக முரளி விஜய் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார். செஞ்சுரி அடிக்கிறார், சிக்ஸர்கள் விளாசுகிறார் எனப் பரபர ஃபார்மில் இருந்தவரைப் பேட்டி எடுப்பதற்காக சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்துக்குள் ஒரு மாலை வேளையில் நுழைந்தேன். சென்னை அணியின் மேலாளர் ரஸல், ''எல்லோரும் பிராக்டீஸில் இருக்கிறார்கள்... கிரவுண்டுக்குள்ளேயே பேட்டி எடுத்துக்கொள்ளலாம்'' எனச் சொல்ல, பவுண்டரி லைனை ஒட்டியபடியே நடக்க ஆரம்பித்தேன். ஒருபக்கம் மும்பை இந்தியன்ஸ் அணியும், இன்னொருபக்கம் சென்னை அணியும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. ஒரு ஓரத்தில் சச்சின் டெண்டுல்கருடன் நின்றபடியே பேசிக்கொண்டிருந்தார் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்.

அப்படியே அவரைக் கடந்து சென்னை சூப்பர் கிங்ஸின் பக்கம் போனேன். ஸ்டீஃபன் ஃப்ளெம்மிங் வேகமாகப் பந்தை த்ரோ செய்ய அதை வேகமாக அடித்துக்கொண்டிருந்தார் தோனி. நான் முரளி விஜய்யை நெருங்கும் நேரத்தில் எல்லோரும் என்னைப் பார்த்துக் கத்துகிறார்கள். என்ன நடக்கிறது என்பதே புரியாமல் சட்டென நான் திகைத்துப்பார்க்க, என் மூக்கை உரசியபடி, மைக்ரோ செகண்ட் இடைவெளியில் தோனி அடித்த பந்து கடந்து சென்றது. அங்கே இருந்த அத்தனை பேரும் அதிர்ந்துவிட்டார்கள். தோனி அருகில் ஓடிவந்தார். அவர் என்ன கேட்டார் என்பது நினைவில் இல்லை. 'ஆர் யூ ஓகே' எனக்கேட்டிருப்பார் என நினைக்கிறேன். தோளில் ஒரு தட்டுத்தட்டிவிட்டு மீண்டும் பயிற்சிக்குச் சென்றுவிட்டார். தோனியை மிக மிக அருகில் பார்த்த முதல் த்ரில் தருணம் அதுதான்.

தோனி அணிக்குள் வந்தது, கேப்டன் ஆனது, உலகக்கோப்பைகளை வென்றது என எல்லாக் கதைகளும் எல்லோருக்குமே தெரியும் என்பதால் அதைப்பற்றியெல்லாம் இங்கே நான் விரிவாக எழுதப்போவதில்லை. தோனியின் கரியரில் நான் பார்த்து வியந்த, கேட்டு வியந்த சில தருணங்களை மட்டும் பகிரலாம் என நினைக்கிறேன்.

2007-ல் டி20 போட்டிகளின் மீது பெரிய ஆர்வமோ, ஆதரவோ ரசிகர்களிடம் இருக்காது. சச்சின், டிராவிட், கங்குலி என இந்திய அணியின் சீனியர்களே இந்த டி20 ஃபார்மேட்டை 'இதெல்லாம் கிரிக்கெட்டே இல்லை' எனப்புறக்கணித்த காலம்தான் அது. இதனால் 2007-ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பைக்கான அணித்தேர்விலிருந்து தாங்கள் விலகுவதாகவும், இளைஞர்களுக்கு வழிவிடுவதாகவும் சீனியர்கள் அறிவித்தார்கள். அதனால், சீனியர்கள் இல்லாத, புதுமுகங்கள் நிறைந்த இந்திய அணிக்கு தோனி தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேப்டனாக தோனி எதிர்கொண்ட முதல் தொடரே உலகக்கோப்பைதான்.

ஓராண்டாக ஓய்வு முடிவை அறிவிக்காமலேயே நீட்டித்துக்கொண்டுபோன தோனி, இப்போது ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் ஓய்வை அறிவித்திருப்பதற்கும் ஒருவகையில் செய்தியாளர்கள்தான் காரணம். சென்னைக்கு ஐபிஎல் பயிற்சிக்காக வந்திருக்கும் தோனி, க்ரவுன் ப்ளாஸா (பார்க் ஷெரட்டன்) ஹோட்டலில் தங்கியிருக்கிறார். 'பயோசெக்யூர் பபுள்' என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களைத்தவிர இங்கே யாருக்கும் அனுமதி கிடையாது. அதேபோல் சிதம்பரம் ஸ்டேடியத்துக்குள்ளும் செய்தியாளர்கள் நுழைய முடியாது. ஐபிஎல் நடக்கப்போகும் துபாயிலும் கொரொனா சூழல் காரணமாக செய்தியாளர் சந்திப்புகள் கிடையாது என்பதால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு அவர் எந்தச் செய்தியாளரையும் நேரடியாக சந்திக்கப்போவதில்லை. எந்த விளக்கமும் கொடுக்கவேண்டிய நிர்பந்தம் இல்லை என்பதுதான் இந்த நேரத்தில் அவர் ஓய்வை அறிவிக்கக் காரணமாக இருக்கக்கூடும். அவருக்குத் தன்னைப்பற்றிப் பேசுவதும், தன்னிலை விளக்கங்கள் கொடுப்பதும் எப்போதும் பிடிக்காது.

தோனியின் ப்ளேயிங் லெவனை மட்டுமல்ல அவரின் பர்சனல் முடிவுகளையும் யாராலும் கணிக்கமுடியாது. தன்னுடைய திருமணம் முதல் ஓய்வு வரை அத்தனையையும் யாரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் நிகழ்த்திவிட்டு, சத்தம் இல்லாமல் கடந்துசெல்வதுதான் தோனியின் ஸ்டைல். தோனிக்கு முன்மாதிரிகளும் இல்லை. பின்மாதிரிகளும் இருக்கப்போவதில்லை.



1 view0 comments

Comments


bottom of page