top of page

ஆத்திகம் முதல் நாத்திகம் வரை: கொள்கைகள் ஒன்றாகப் பயணிக்கும் தமிழகம் #தமிழர்_பெருமை



(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் ஏழாவது கட்டுரை.)

இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களில் 'நாடு' என்ற பெயரைக் கொண்ட மாநிலங்கள் இரண்டு. ஒன்று தமிழ் நாடு. மற்றொன்று மகாராஷ்டிரம். 'மகாராஷ்டிரா' என்றால் வடமொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளில் 'மிகப்பெரிய நாடு' என்று பொருள்.

அந்த மாநிலத்தில் பேசப்படும் மொழியின் பெயருடன், நாடு என்று அடையாளப்படுத்தப்படும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.

தமிழ்மொழியின் தொன்மை, இலக்கிய வளம் ஆகியவை குறித்து பேசப்படும் அளவுக்கு சமகால தமிழகத்தின், தமிழ் சமூகத்தின் சிறப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே பேசப்படுகின்றன.

குறிப்பாக, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்துக்குப் பிறகு மொழி மற்றும் சமூகம் ஆகிய தளங்களில், இந்தியாவின் பிற பகுதிகளில் நிகழ்ந்தவற்றை தமிழகம் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.

"தமிழ்நாடு" என்று பெயர் மாற்றத்திற்கு முன்பே, இந்திய மாநிலங்கள் மொழி வாரியாகப் பிரிக்கப்படும் முன்பே, இந்திய சுதந்திரத்திற்கு முன்பே, பிரிக்கப்படாத மதராஸ் மாகாணத்தில் தற்போது தமிழ்நாடு என்று அறியப்படும் பகுதியில் இந்த மாற்றங்களின் தொடக்கம் நிகழ்ந்துள்ளது.

மொழிப்பற்று என்பதையும் கடந்து, மொழி உரிமை, கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கான உரிமை ஆகியவை குறித்த உணர்வுகள் மேலோங்கி இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

தமிழர் பெருமை பிற தொடர்களுக்கான இணைப்புகள்


  • கரிகாலன் கட்டிய கல்லணை: தமிழர்களின் நீர் மேலாண்மை குறித்து நீங்கள் அறிவீர்களா?



  • அம்மை முதல் கொரோனா வரை கைகொடுக்கும் தமிழர் மருத்துவ முறை: கவனிக்கப்படாதது ஏன்?


சிலவற்றில் ஒத்திசைந்து இருந்து, சிலவற்றில் எதிரெதிர் துருவங்களாக இருந்த வெவ்வேறு கொள்கைகள் இணைந்து, இயைந்து அல்லது எதிர் நிலைகளில் இருந்து இயங்கி, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் எந்த வகையில் பங்காற்றினார்கள் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

1916ஆம் ஆண்டு - தமிழகத்தின் தற்கால வரலாற்றில் மைல்கல்

தனித்தமிழ் இயக்கத்தை மறைமலை அடிகள் நிறுவிய ஆண்டும், திராவிட இயக்கத்தின் முன்னோடி இயக்கமான, 'நீதிக் கட்சி' என்று பரவலாக அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை சி.நடேசன், டி. மாதவன் நாயர், பிட்டி தியாகராயர் ஆகிய மூவரும் நிறுவிய ஆண்டும் ஒன்றுதான். அது 1916ஆம் ஆண்டு.

அதாவது, தமிழ்நாட்டின் மொழிச் சீர்திருத்தம், சமூகச் சீர்திருத்தம் ஆகியவற்றுக்கான பயணத்தின் முக்கிய நிகழ்வுகள் இரண்டும் ஒரே காலகட்டத்தில் தொடங்கியுள்ளன.

திராவிட இயக்கத்தின் முன்னோடியான தலித்

தமிழ்நாடு இன்று அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக அடைந்திருக்கும் முன்னேற்றங்கள் முக்கிய காரணியாக திராவிட இயக்கம் இருப்பதாக பரவலான , கணிசமானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்து நிலவுகிறது.

திராவிட இயக்கத்தின் மூலம் 19ஆம் நூற்றாண்டிலேயே இருந்துள்ளது.

1885ஆம் ஆண்டு திராவிட பாண்டியன் எனும் இதழைத் நிறுவிய அயோத்திதாச பண்டிதர், அதற்கு ஆறு ஆண்டுகள் கழித்து 1891இல் திராவிட மகாஜன சபை எனும் அமைப்பை நிறுவினார்.

தமிழ்நாட்டில் இன்று பரவலான தாக்கத்தையும் செல்வாக்கையும் கொண்டுள்ள திராவிடக் கருத்தியலின் முன்னோடியாக அயோத்திதாச பண்டிதர் இருந்தாலும் திராவிட இயக்க மேடைகளிலும் பதிப்புகளிலும் அயோத்திதாசர் குறிப்பிடப் படுவதைவிட அம்பேத்கரிய மற்றும் தலித்திய அமைப்புகளாலேயே அயோத்திதாச பண்டிதர் இன்றளவும் பெரிதும் கொண்டாடப்படுபவராக இருக்கிறார்.

தமிழர் பெருமை பிற தொடர்களுக்கான இணைப்புகள்


  • தமிழ் ஏன் உலகச் செம்மொழிகளில் ஒன்று? அதன் சிறப்பும் தொன்மையும் என்ன? #தமிழர்_பெருமை

இட்லி, தோசை தமிழர்களின் உணவுகளாக மாறியது எப்போது? வரலாற்று சான்றுகள் கூறுவது என்ன?


திராவிட இயக்கத்தின் மூலம் தமிழகத்தில் இருக்கும் தலித்துகள் அடைந்திருக்கும் முன்னேற்றம் என்பது இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் உள்ளிட்டோரின் செயல்பாடுகளால் நடைபெற்ற பலன்களின் நீட்சியே என்று 2017ஆம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் குறிப்பிட்டிருந்தார்.

தனித்தமிழ் இயக்கம் - திராவிட இயக்கம்

மொழி சீர்திருத்தத்தில் பெரும்பங்காற்றிய, தனித்தமிழ் இயக்கத்தின் நிறுவனரான மறைமலை அடிகள், தீவிரமான சைவ மத நம்பிக்கை உடையவர். அவர் தனித்தமிழ் இயக்கத்தின் செயல்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்துக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில், சாதி - மத ஒழிப்பு, கடவுள் மறுப்பு உள்ளிட்ட கொள்கைகளை தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் சென்று பரப்பிக்கொண்டிருந்தார் பெரியார்.


இவர்கள் இருவருமே பிராமண ஆதிக்கத்தை எதிர்க்கும் நிலைப்பாடு உடையவர்களாக இருந்தாலும், இந்து மதம் நிலைத்திருக்க வேண்டும் என்று கருதினார் மறைமலை அடிகள்.

"இந்து சமய உணர்வே, இந்துக்கள் என்ற ஒருமையே நம் தமிழ்நாட்டை, பாரதத்தை, சைவத்தை, வைணவத்தை இன்றளவும் காத்து வருகின்றது. தமிழ், சைவம், தமிழ்நாடு என்பனவற்றின் தனி உரிமை களைப் பாதுகாத்துக் கொண்டே இவற்றிற்கு இடையூறு இல்லாமல் இந்து சமயத்தையும், இந்திய நாட்டையம் தளராது பாதுகாக்க வேண்டுமென்றும் அடிகள் ஆர்வம் ததும்பக் கூறுவதுண்டு," என மறைமலை அடிகளின் மகன் மறை. திருநாவுக்கரசு அவரது தந்தையின் வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கடவுள்களை பெரியார் கடுமையாக விமர்சித்ததை எதிர்த்து மறைமலை அடிகள் பொது வெளியில் பேசியும் எழுதியும் வந்தவர். ஆனால், தனது ஆராய்ச்சிகளும், எழுத்துகளும் "கலைஞர்க்கும், புலவர்க்கும், பொதுமக்களிற் சிறந்தார் சிலர்க்குமே பயன் தருகின்றன. ஈ.வெ.ராவின் கிளர்ச்சியோ சிற்றூர் , பேரூர்களிலெல்லாம் பரவி பயன் விளைக்கிறது," என மறைமலை அடிகள் தன்னைக் காண வருவோரிடம் கூறுவார் என்று அதே நூலில் மறை. திருநாவுக்கரசு குறிப்பிட்டுள்ளார்.

மத நம்பிக்கை, கடவுள் மறுப்பு - ஒன்றாகப் பயணம்

40 ஆண்டு காலத்துக்கும் மேலாக குன்றக்குடி மடத்தின் தலைமை ஆதீனமாக பொறுப்பு வகித்த குன்றக்குடி ஆதீனம், பெரியாருடன் மேடையையும் நட்பையும் பகிர்ந்துகொண்டவர்

1950களில் பெரியார் இந்து கடவுள் சிலைகளை உடைத்து போராட்டம் நடத்தியபோது, அதற்கு எதிராக ஓர் அமைப்பை உருவாக்கி, பெரியாரின் செயலை விமர்சித்து துண்டறிக்கைகளை வெளியிட்டவர் குன்றக்குடி அடிகளார்.

பெரியார் 1955இல் மலேசிய சுற்றுப்பயணம் சென்றபோது அங்கு நாத்திகப் பிரசாரம் செய்தார் என்பதால், அதற்கு சில நாட்களுக்கு பின்பு தாமும் மலேசியா (அப்போது 'மலாயா') சென்று அதற்கு எதிராக ஆதிக்க பிரசாரம் செய்தவர் குன்றக்குடி அடிகளார்.

ஆனால், பிற்காலத்தில் கோயிலில் தமிழ் மொழியில் மந்திரங்கள் ஓதுதல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் தாழ்த்தப்பட்டோர் ஆலய நுழைவு உள்ளிட்ட கோரிக்கைகளில் திராவிட அமைப்புகளுடன் ஒத்த கருத்துடையவராக குன்றக்குடி அடிகளார் இருந்தார். திமுகவின் முதல் ஆட்சிக் காலத்தில் தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் இவர் இருந்தார்.

'காவி உடை அணிந்த கருப்புச் சட்டைக்காரர்' என்று கூறப்படும் அளவுக்கு சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவும், நேரடியாக பங்கும் ஆற்றியுள்ளார் குன்றக்குடி அடிகள்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது திமுக அரசு சட்டம் கொண்டுவந்தது பரவலாக அறியப்பட்டதுதான். பல இந்து மத அமைப்புகளும் பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் கடுமையாக விமர்சித்த போதும் பெரியார் உடனான நட்பை தொடர்ந்து குன்றக்குடி அடிகள் தனது மதத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கோயில்களில் அனைத்து சாதிகளையும் சேர்ந்தவர்களையும் அர்ச்சகராக நியமனம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் - திராவிட தலைவரின் சோசியலிச பிரசாரம்

திராவிட இயக்கத்தின் முன்னணித் தலைவராக அறியப்பட்ட பெரியார்தான், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதன் முதலில் தமிழில் வெளியிட்டவர்.

காரல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் எழுதிய அந்த அறிக்கையை 'சமதர்ம அறிக்கை' எனும் பெயரில் பெரியார் தனது தோழர் எஸ்.ராமநாதன உடன் இணைந்து பதிப்பித்து வெளியிட்டார்.

1932ஆம் ஆண்டு பெரியார் மேற்கொண்ட சோவியத் பயணம் அவருக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

சுயமரியாதை இயக்கத்தினரும் தொழிலாளர் தினத்தை அனுசரிக்க வேண்டும் என்று அவர் 1933இல் கூறினார்.

சோவியத் ரஷ்யாவில் நிலவிய அறிவியல் வளர்ச்சி, மருத்துவம், பெண்ணுரிமை, ரஷ்ய புரட்சி, பொதுவுடைமைக் கொள்கை, கடவுள் மறுப்பு உள்ளிட்டவை குறித்து குடியரசு இதழில் எழுதினார் பெரியார்.

சோவியத் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய பெரியார், திரு, திருமதி போன்ற அடைமொழிகளை பயன்படுத்தாமல் ஒருவரையொருவர் 'தோழர்' என்று அழைத்துக் கொள்ள வேண்டும் என்று தாம் விடுத்த அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டார்

பின்னாளில் 'தோழர்' எனும் சொல் கம்யூனிஸ்டுகளை குறிப்பதற்கான சொல்லாகவே நிலை பெற்றுவிட்டது.

குழந்தைகளுக்கு பெயர் வைக்குமாறு தம்மிடம் வந்தவர்களின் குழந்தைகளுக்கு 'மாஸ்கோ', 'ரஷ்யா' உள்ளிட்ட பெயர்களை சூட்டினார்.

சோவியத் ரஷ்யா பயணம் மேற்கொண்ட பின்பு சோசியலிசம் குறித்து பெரியார் அதிகமாக பேசியும் எழுதியும் வந்ததால், கம்யூனிச எதிர்ப்பு நிலையுடைய பிரிட்டிஷ் அரசிடமிருந்து கடுமையான அழுத்தங்கள் வந்தன.

தொடர்புடைய செய்திகள்


  • பெரியார்: புனிதங்களை சுட்டுப் பொசுக்கியவர்

  • யார் இந்தப் பெரியார்? துறவியாக காசிக்கு சென்றது முதல் திராவிட இயக்கம் வரை


இதனால் சுயமரியாதை இயக்கத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, சோசலிச திட்டத்தை கைவிடுவதாக 1935ஆவது ஆண்டில் பெரியார் அறிவித்தார்.

அதன்பின்பு அவர் சோசியலிச பிரசாரம் எதிலும் ஈடுபடவில்லை.அதே சமயத்தில் இந்தியாவில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளையும் பெரியார் பிராமணிய கட்சிகள் என விமர்சனம் செய்து பேசியும் எழுதியும் வந்தார்.

இதேபோல தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அறியப்பட்ட ம. சிங்காரவேலரும், மகாத்மா காந்தியின் மீது கொண்ட பற்றின் காரணமாக காந்தி ஆசிரமம் நடத்திக்கொண்டிருந்த, பின்னாளில் தமிழகத்தின் முக்கியமான கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராக அறியப்பட்ட ப. ஜீவானந்தம் ஆகியோர் பெரியாருடன் சுயமரியாதை இயக்கத்தில் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றி இருக்கிறார்கள்.

1931இல் பெரியார் சோவியத் ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட சமயத்தில் பெரியார் நடத்தி வந்த குடியரசு இதழில் சிங்காரவேலர் பல கட்டுரைகளை எழுதினார்.

அதற்கு ஆறு ஆண்டுகள் முன்பு, அதாவது 1925இல் நிறுவப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவராக சிங்காரவேலர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சியில் இல்லாவிட்டாலும் பங்காற்றிய இயக்கங்கள்

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் ஆட்சியில் இருப்பதால் தற்போது தமிழகம் அடைந்திருக்கும் முன்னேற்றங்கள் சறுக்கல்கள் ஆகியவை அனைத்தும் பெரும்பாலும் திராவிட கட்சிகளை காரணமாக்கப்படுகின்றன.

ஆனால் தமிழகத்தின் வளர்ச்சியில், திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வரும் முன்பு ஆட்சியில் இருந்த தேசிய கட்சியான காங்கிரஸ், தமிழகத்தில் ஒருபோதும் ஆட்சி செய்யாத பொதுவுடைமை இயக்கங்கள் மற்றும் அம்பேத்கரிய இயக்கங்களின் பங்கையும் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார், தமிழக அரசியல் பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம் உள்ளிட்டவை குறித்து பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ள எழுத்தாளரும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரை.

சி. ராஜகோபாலாச்சாரியார் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோதுதான் பண்ணையார் ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

கம்யூனிஸ்டுகள் போராட்டம் நடத்தியதால் அவர்களை மட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் என்றாலும் ராஜாஜியின் பதவி காலத்தில் நிகழ்ந்த ஒரே நல்ல விஷயம் இதுதான் என்று கூறும் ராஜதுரை, சுதந்திரத்திற்கு பின்பு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த இன்னொரு காங்கிரஸ்காரர் ஆன காமராஜரின் ஆட்சி காலம் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

"காமராஜரின் ஆட்சிக் காலத்தில் பள்ளி கல்விக்கு மிகவும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் பல தொழிற்சாலைகள் தமிழகத்தில் நிறுவப்பட்டன. அணைகள் கட்டுவதால் வரும் பாதிப்புகள் பற்றிய சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு இப்போது அளவுக்கு அதிகம் இல்லாத காலகட்டம் அது. அப்போது தமிழ்நாட்டில் நிறைய அணைகள் கட்டப்பட்டன. உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடிய அந்த காலகட்டத்தில் அதைப் போக்க அணைகள் உதவின. அதே காலகட்டத்தில்தான் நில உச்சவரம்புச் சட்டமும் கொண்டு வரப்பட்டது," என்றார் அவர்.

பெரும்பாலான காவிரி டெல்டா பகுதியை உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டம் தமிழகத்தில் நிலச் சீர்திருத்தத்துக்கு உதவியது என்கிறார் ராஜதுரை.

"திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் மற்றும் அரச ஒடுக்குமுறைகள் உள்ளிட்டவை நிகழ்ந்துள்ளன. எனினும் தொழில்மயமாக்கல், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு இவர்களின் ஆட்சி காலத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தொழில்மயமாக்கல் மூலம் கிடைத்த வேலைவாய்ப்பு கிராமங்களில் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளான தலித்துகள் நகரங்களுக்கு குடிபெயர உதவியது," என்று அவர் கூறுகிறார்.

தமிழ்நாட்டின் சமீபகால வரலாற்றில் முக்கியமான தலைவராக போற்றப்படும் அயோத்திதாச பண்டிதர் திராவிட கருத்தியலின் மூலவராக இருந்திருக்கிறார். திராவிட கருத்தியலின் செல்வாக்குமிக்க தலைவராக இருந்த தந்தை பெரியார் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் முதன்முதலில் வெளியிட்டவர் ஆக இருந்திருக்கிறார்.

தமிழக பொதுவுடமை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக அறியப்படும் ஜீவானந்தம் அதற்கு பல காலம் முன்பே தம்மை கடவுள் மறுப்பாளராக அறிவித்துக் கொண்டு சுயமரியாதை பிரசாரத்தில் தந்தை பெரியாருடன் இணைந்து ஈடுபட்டிருக்கிறார்.

மருத்துவ மாணவர்களுக்கான சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தை நாடி இருந்தன

அந்த வழக்கு விசாரணையில் கருத்து தெரிவித்த நீதிபதிகள் "தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்காக எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்திருக்கின்றன. இது அசாதாரணமானது," என்று கூறியிருந்தார்கள்.

இந்த 'அசாதாரண' சூழ்நிலை ஒரு நூற்றாணடுக்கும் மேலான காலம் தமிழகத்தில் பரிணாமம் பெற்றதுதான் தற்காலத் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்று.


0 views0 comments

Comments


bottom of page