top of page

இலங்கை வெற்றிலை கூரு: உயரும் விலை, கவலையில் விற்பனையாளர்கள்



இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக வெற்றிலை கூரு ஒன்றின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் ஒரு கூரு வெற்றிலை, சுமார் 50 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக வெற்றிலை விற்பனையாளர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

சந்தையில் பாக்கின் விலை வெகுவாக அதிகரித்துள்ளமையே, வெற்றிலை கூரின் விலை 50 ரூபாய் வரை அதிகரிக்க காரணம் என அவர்கள் கூறுகின்றனர்.

கொழும்பு சந்தை நிலவரத்தின் பிரகாரம், சந்தையில் 8 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட பாக்கு, இன்று 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

அதேநேரம், 2 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட வெற்றிலை ஒன்றின் விலை, 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

வெற்றிலை கூரு ஒன்றில், மூன்று வெற்றிலைகள், ஒரு பாக்கு, புகையிலை மற்றும் சுன்னாம்பு ஆகியன வைக்கப்பட்டு இதுவரை காலமும் 30 ரூபாய் அளவிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

பாக்கின் விலை வெகுவாக அதிகரித்தமையினால், 30 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட வெற்றிலை கூர், இன்று 50 ரூபாய் வரை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.



பாக்கின் விலை அதிகரிப்பு ஏன்?

இலங்கையில் பாக்கு அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் தற்போது மிகவும் வறட்சியான காலநிலை நிலவி வருவதாக அறிய முடிகின்றது.

இதனால், பாக்கு உற்பத்தி குறைவடைந்துள்ள நிலையில், பாக்குக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

குறிப்பாக பஹதஹேவாஹெட்ட மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் வெற்றிலை மற்றும் பாக்கு ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன.

கொட்டை பாக்கு ஒன்றின் விலை 6 ரூபாயாக தற்போது காணப்படுகின்ற போதிலும், அதனை நுகர்வோர் பெரிதாக விரும்புவதில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

வறட்சியுடனான காலநிலை மேலும் நீடிக்கும் பட்சத்தில் வெற்றிலை கூரு ஒன்றின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

வெற்றிலை கூரின் விலை அதிகரித்துள்ளமையினால், வெற்றிலை நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாதாரண வேலைகளுக்கு செல்வோரே அதிகளவில் வெற்றிலை உண்ணும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

தமக்கான ஊதியத்தை பெற்று வெற்றிலை கூரொன்றை கொள்வனவு செய்வது சிரமமான விடயம் என நுகர்வோர் கூறுகின்றனர்.


0 views0 comments

Comments


bottom of page