top of page

சித்த மருத்துவம் மீது மத்திய அரசு பாரபட்சம் காட்டுவது ஏன்? நீதிமன்றம் கேள்வி



கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சித்த மருத்துவர் தணிகாசலம் என்பவர் சோஷியல் மீடியாக்களில் தகவல் பரப்பி வந்தார். இது தொடர்பாக அவர் மீது எழுந்த புகாரின் பேரில், கடந்த மே மாதம் 6 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். தவறான தகவல்களை பரப்பி வந்ததால், அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தணிகாசலத்தின் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது இது தொடர்பாக மத்திய, மாநில அரசு பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். இந்த நிலையில் இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாற்றாந்தாய் மருத்துவத்தை போல சித்த மருத்துவத்தின் மீது பாரபட்சம் காட்டுவது ஏன்? என்றும் பிற மருத்துவத்துறைகளை விட சித்த மருத்துவத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கியது துரதிர்ஷ்டவசமானது என்றும் நீதிபதிகள் கூறினர்.

தொடர்ந்து, AYUSH என்ற அமைச்சக பெயரில் இருந்து சித்த மருத்துவத்தை குறிப்பிடும் ‘எஸ்’ என்ற எழுத்தை நீக்கி விடலாம் என்று கூறிய நீதிபதிகள், 10 ஆண்டுகளில் ஆயுர்வேதத்துக்கு ரூ.3,000 கோடி நிதி வழங்கப்பட்டதாகவும் சித்தாவிற்கு ரூ.437 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, நீதிமன்றத்தின் கருத்து தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசு அனுமதி கேட்டதால், தணிகாசலம் மீதான குண்டர் சட்ட வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


0 views0 comments

Comments


bottom of page