top of page

தமிழர் மருத்துவ முறை: அம்மை முதல் கொரோனா வரை கைக்கொடுக்கும் வைத்தியம் - பெரிதாக கவனிக்கப்படாதது ஏன்?


ஏன் எல்லை கடந்து பயணிக்கவில்லை?


சித்தர்களால் பழங்காலத்தில் எழுதி வைக்கப்பட்ட ஓலைச்சுவடிகளில் உள்ள மருத்துவ குறிப்புகளின்படி வைத்தியம் பார்ப்பது அல்லது மூலிகை தயாரிப்பது, சித்த மருத்துவமுறை என கருதப்படுகிறது. இந்த சித்த மருத்துவம் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமுறையாக கருதப்பட்டாலும், ஆங்கில மருந்துகளை போன்று மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு நவீன அறிவியல் மொழியில் அதனை இயற்றாமல் போன காரணத்தால் இந்த மருத்துவமுறை தமிழகத்தை தாண்டியும், உலகளவிலும் பரவிச் செல்ல முடியாமல் போனது  என்கின்றனர் சித்த மருத்துவம் சார்ந்து பணிபுரியும் நிபுணர்கள்.

மேலும் சித்த மருத்துவ குறிப்புகள் பெரும்பாலும் தமிழ் மொழியில் இருப்பதால், இதற்கான எல்லையும் சிறியதாக இருப்பதாக கருதுகிறார்கள் நிபுணர்கள். ஆனால்  தற்போது சித்த மருத்துவம் குறித்த ஆராய்ச்சிகள் ஏராளமாக நடைபெற்று வருகின்றன.


அம்மை நோயிலிருந்து கொரோனா வரை:

"இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்கு சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை அளித்துவருகின்றனர். இதுவரை மூன்றாயிரத்துக்கும் அதிகமானோர் சித்த மருத்துவ முறையால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்" என்கிறார் சித்த மருத்துவர் வீரபாபு.

இந்த சித்த மருத்துவ முறையில் இதுவரை எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

தமிழகத்தை பொருத்த வரை, சித்த மருத்துவ முறையை பயன்படுத்துவது இது முதல்முறை அல்ல. அதாவது முதன்மை மருத்துவமாக பயன்படுத்தாவிட்டாலும், நிலவேம்பு, கபசர குடிநீர் போன்ற சித்த மருத்துவ மருந்துகள் இதற்கு முன்பே அரசாங்கத்தாலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இப்போது இந்த கொரோனா காலத்தில் கபசுர குடிநீரை வழங்கலாம் என மத்திய ஆயுஷ் அமைச்சகமும் வழிகாட்டுதல் தந்துள்ளது.

ஆனால் சித்த மருத்துவ முறை என்பது கொரோனா மட்டுமல்லாமல் பல பெருந்தொற்று காலங்களை கடந்து வந்து கொண்டிருக்கிறது என்கிறார் தேசிய சித்தா இன்ஸ்டியூட்டில் மருத்துவ அதிகாரி மற்றும் இம்காப்ஸின் துணை தலைவராக பணியாற்றிய சித்த மருத்துவர் வேலாயுதம்.

"பழைய நோய்களில் ஒன்றான அம்மை நோயை பொறுத்தவரை தனிமைப்படுத்துதல் போன்ற முறையை நாம் பாரம்பரியாமாகவே கடைபிடித்து வருகிறோம். மஞ்சள்காமாலை போன்ற தீவிரமான நோயாக இருக்கும்பட்சத்தால், கீழாநெல்லி, ஆமனக்கு இலைக் கொழுந்து, கரிசாலாங்கண்ணி போன்ற மூலிகைகள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன. நிலவேம்பு மற்றும் பப்பாளிச்சாறு டெங்குவிற்கு பயனளிக்கக்கூடியதாக உள்ளது என்பதை அரசாணையாக பிறப்பித்துள்ளனர்." என்கிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.


"டெங்குவிற்கும் முன் 2007ஆம் ஆண்டு சிக்கன் குனியா வந்தபோதே நிலவேம்பு கசாயத்தை கொடுத்து சோதித்து பார்த்தோம் அது நன்றான ஒரு விளைவை ஏற்படுத்தியது. டெங்குவுக்கான சித்த மருத்துவமாக நிலவேம்பு குடிநீரை கொடுத்தபோது அது காய்ச்சலுக்கான அறிகுறியை தவிர்த்ததே தவிர ப்ளேட்லட்சை கூட்டவில்லை எனவே நிலவேம்பு குடிநீருடன் பப்பாளி இலைச் சாறை கொடுத்தோம். ஹெ1 என்1 சமயத்தில் கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது," என்கிறார் வேலாயுதம்.

"தற்போதுள்ள கொரோனா வைரஸும் ஒரு சார்ஸ் வகையை சேர்ந்த வைரஸ் என்பதால் இதற்கும் கபசுர குடிநீர் பருகலாம் என்று பரிந்துரைத்தோம்," என்கிறார் மருத்துவர் வேலாயுதம்.

"எனவே அம்மை நோயிலிருந்து, மஞ்சள் காமாலை, டெங்கு, சிக்கன் குனியா, ஹெச்1 என்1, தற்போது கொரோன வரை இந்த அனைத்து வைரஸை எதிர்கொள்வதில் சித்த மருத்துவமுறை மிகவும் பலனளிக்கக்கூடியதாக உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்," என்கிறார் அவர்.


கொரோனாவுக்கு சிகிச்சை:

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3000க்கும் அதிகமானோர் சித்த மருத்துவ முறையால் குணமடைந்துள்ளனர் என்கிறார் மருத்துவர் வீரபாபு.

"முதலில் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் 465 படுக்கைகள் அமைக்கப்பட்டு, அங்குள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது 3200க்கும் மேலானோர் இந்த சித்த மருத்துவ சிகிச்சை முறைப்படி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்" என்கிறார் வீரபாபு.

கொரோனா சிகிச்சையில் சித்த மருத்துவத்தை முதன்மைப்படுத்தி சிகிச்சை அளித்தாலும் சில சமயங்களில் தேவைப்பட்டால் பாரசிடமல் போன்ற மருந்துகளையும் நோயாளிகளுக்கு கொடுக்கின்றோம் என்கிறார் அவர்.


2 views0 comments

Comentarios


bottom of page