top of page

மூணாறு நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு



கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் கடந்த 6 ஆம் தேதி நள்ளிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தூத்துக்குடி மாவட்டத்தின் கயத்தாறு பகுதியில் இருந்து வேலைக்காக சென்றவர்கள் உட்பட 80 பேர் சிக்கினர். தகவல் அறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினர் 15 பேரை நிலச்சரிவில் இருந்து உயிருடன் மீட்டனர். அதற்குள்ளாகவே 14 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டனர். அதனைத்தொடர்ந்து, மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டு மேலும் 100 பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக அங்கு மீட்புப்பணி நடைபெற்ற நிலையில், இதுவரை 61 சடலங்கள் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவில் இறந்தவர்களுள் பெரும்பாலும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான். அதனால் அவர்களது குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நிலச்சரிவில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் கொடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் நேரடி வாரிசுகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்றும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


0 views0 comments

Комментарии


bottom of page